வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இல்லம் ஒன்றில் போதை மாத்திரை வியாபாரம் செய்யப்படுவதாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் (DCDB) பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று (05-03-2025) குறித்த இல்லத்தில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 188 போதை மாத்திரைகளுடன் அதே பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில், இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை, வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜயசோமமுனி அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இதில், உப பொலிஸ் பரிசோதகர் ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்டுகள் திசாநாயக்க, அசங்க, மற்றும் பொலிஸ் கொன்ஸ்தாபிள்கள் சிந்நக்க, விதுசன், பொலிஸ் சாரதி திசாநாயக்க ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.
வவுனியா மாவட்டத்தில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான தகவல்களையும் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 Comments