திம்புள்ள பத்தனை பகுதியில், திருமணத்திற்கு புறம்பான காதல் உறவு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்தவர் ஹட்டன், கொட்டகலை பகுதியைச் சேர்ந்தவர். இவர், தமது சட்டபூர்வ மனைவியுடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருந்தாலும், மற்றொரு பெண்ணுடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்தார். இந்த விவகாரம் மனைவியிடம் தெரியவந்ததைத் தொடர்ந்து, ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக சமாதானம் செய்வதற்காக இருபக்கமும் நேற்று (17) பிற்பகல் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் சந்தித்தனர். அங்கு கணவர், மனைவியுடன் இணைந்தே வாழ்ந்துவருவதாக உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், கணவர் தனது கள்ளக் காதலியுடன் கொட்டகலையில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த மைத்துனர்கள் ஆத்திரமடைந்து, கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன், அவரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர்.
இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் பத்தனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். காயமடைந்த நபர் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் நடந்த இடமான கொட்டகலை சுரங்கப்பாதை அருகே தீவைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் காரணமாக கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. சந்தேகநபர்கள் இன்று (18) ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
0 Comments